ட்ரம்பின் அதிரடியால் இலங்கைக்கு பல நன்மைகள்!

அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்படவுள்ள ஆட்சிமாற்றத்தினால், இலங்கை ஆடைத் தொழில் துறை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று Capital Alliance இன்று மூலோபாய அதிகாரி புரசிசி ஜினதாச தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 44 வீதத்தை அமெரிக்காவே கொள்வனவு செய்கிறது.

மேற்குலகில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளமை ஆகியவற்றினால் இலங்கை ஆடை ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அமெரிக்காவில் நிறுவனங்களை அமைத்து உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலேயே ட்ரம்ப் கவனம் செலுத்துவார்.

மெக்சிகோ மற்றும் சீனா மீது அவர் தடைகள், கட்டுப்பாடுகளை விதிப்பாரேயானால் அது இலங்கைக்கே உண்மையில் நன்மையாக இருக்கும்.

இந்த இரண்டு நாடுகளும் ஆடை தயாரிப்புத் துறையில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.

ரஸ்யாவை அனைத்துலக அரங்கிற்கு இழுத்து வரும் முயற்சிகளில் டரம்ப் ஈடுபட்டுள்ளார். இதன் விளைவாக ரஸ்யாவின் பொருளாதாரம் திறந்து விடப்படலாம்.

இது, இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். இந்த நாட்டில் உற்பத்தியாவும் 15 வீதமான தேயிலையை ரஷ்யாவே கொள்வனவு செய்கிறது.

தெற்காசியாவில் 40 பில்லியன் டொலர் ஆடைகளுக்கு கேள்வி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலகுவாகவே இதனைக் குறிவைக்கலாம்.

மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கும் ஒருவர், தனக்குத் தேவையான உடையைத் தெரிவு செய்தால், அது நேரடியாகவே உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பாவனையாளரின் கையில் கிடைக்கும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*