பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை மேலதிக டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3ஆம் திகதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அவரை, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ரன்யா ராவ், எனது தந்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் தங்க கடத்தல் கும்பல் என்னை பயன்படுத்தி விட்டனர்.
சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களால் சிக்கிக் கொண்டேன். நான் இந்த தங்கம் கடத்தல் வேலையை கமிஷனுக்காக கடந்த 1½ வருடமாக செய்து வருகிறேன் என வாக்குமூலம் அளித்தார்.
மேலும் ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் மும்பை மற்றும் பெங்களூருவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் பொலிஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட தங்கம் கடத்தல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க இன்று நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
Tags
Cinema