கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படுபவர் ஷிஹான் ஹுசைனி . கராத்தே மாஸ்டரான இவர் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்திருக்கிறார். கமல் ஹாசன், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளிலும் தோன்றிய இவருக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் ஷிஹான் ஹுசைனி. இவர் மறைந்த நடிகர் விவேக்குடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். படிக்கும்போதே கராத்தேவில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். அதேபோல் நடிப்பிலும் தனது கவனத்தை செலுத்தினார். இதன் காரணமாக விவேக்குக்கும், இவருக்குமிடையே நல்ல நட்பு கல்லூரி காலத்திலிருந்தே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது சினிமாவுக்குள் வந்துவிட வேண்டும் என்று இரண்டு பேருமே கனவு கண்டார்கள்.
விவேக்கிற்கு முன்னர் ஹுசைனிதான்: ஷிஹான் ஹுசைனி விவேக்கிற்கு முன்னதாகவே கே.பாலசந்தர் மூலம் திரைப்படத்தில் அறிமுகமாகிவிட்டார். அதாவது பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படத்தில் ஒரு ரோலை சிறப்பாக செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்திருக்கிறார்.
பத்ரியில் ஃபேமஸ்: ஹுசைனி தொடர்ந்து நடித்து வந்தாலும் ஒரு நடிகராக அவருக்கு பிரபல்யத்தை தேடி தந்தது என்றால் விஜய் நடித்த பத்ரி படம்தான். அதில் விஜய்யின் கோச்சாக ஒரு பாடலுக்கு வருவார். அதிலிருந்து மேற்கொண்டு பிரபலமடைந்தார் அவர். அதனைத் தொடர்ந்து மை இந்தியா என்று பெயரிடப்பட்ட படத்தில் லீட் ரோலில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவரை நடிக்க வைக்க கௌதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் உண்டு.
கராத்தே ஹுசைனி: ஷிஹான் ஹுசைனி என்பதைவிட கராத்தே ஹுசைனி என்று சொன்னால் இன்னும் பலருக்கு அவரை தெரியும். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு ஹுசைனிதான் கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார். நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் தனது கராத்தே பயிற்சியை கொடுத்திருப்பவர். மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சின்னத்திரையில் தோன்றியும் அவர் கராத்தே பயிற்சி கொடுத்திருந்தார்.
ரத்த புற்று நோய்: சூழல் இப்படி இருக்க தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். அதாவது என்னுடைய ஜெனட்டிக் பிரச்னையால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் வைரஸால் வந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று சொன்னார்கள். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும்.
விஜய்க்கு வைத்த கோரிக்கை: நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். எனக்கு புற்றுநோய் என்று தெரிந்தவுடன் எனது நண்பர்கள் எல்லாம் எனக்கு ஃபோன் செய்து க்ரவுட்ன் ஃபண்டிங் கேளேன் என்று கூறினார்கள். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்" என்றார்.
Tags
Cinema